வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, June 3, 2011

மவுனம்

  “மவுனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மவுனம் கொண்டு சிந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி  நாம்  நமக்குள் இறங்குவோம்.     எங்கே, எப்பொழுதோ படித்த இதயத்தை வருடியவரிகள் இவை. “உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல் தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சு தான்”. அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம். எதற்காப் பேசுகிறோம். எந்த இடத்தில் பேசுகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களை பேசவிட்டு மவுனம் சாதித்து தேவையான பொழுது மட்டும் பேசி, பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறருக்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிறபேச்சை ஒலி நாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது. நாவின் அமைப்பைப் போல் நாம் சொல்லும் சொல் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும்.  எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன். நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததின் காரணம் ஒளவையார் போல “வரப்புயர” என்று சுருங்கப்  பேசி வாழ்வதற்குத்தான்.  இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய்  சொல்ல முயன்றால், சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசிய பின் பிறர் அறியாமல் நாக்கை கடித்துக் கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out